
கொழும்பு14,கிராண்ட்பாஸ் சிறி சுவர்ண சைத்திய வீதியிலுள்ள‘மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம்’ பள்ளிவாசலின் புதியகட்டடத்தொகுதி நேற்று திறக்கப்பட்டபோதிலும் பௌத்த தேரர் தலைமையிலான குழுவினரின் எதிர்ப்பு காரணமாக அன்று
மாலையே அப்பள்ளிவாசல் மூடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் இன்று மாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போது, எதிர்வரும் திங்கட்கிழமை புத்தசாசன அமைச்சில் நடைபெறும் கலந்துரையாடலில் இறுதி்த் தீர்மானம் எட்டப்படும்வரை குறித்த பள்ளிவாசலை தற்காலிகமாக மூடுவதாக இணக்கம் காணப்பட்டது.
சைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசல் பல வருடங்களாக குறித்த இடத்தில் இயங்கி வருகிறது. எனினும் அப்பள்ளிவாசலோடு ஒட்டியதாக நிற்கும் அரச மரத்தின் வேர்கள் பள்ளிவாசல் கட்டடத்திற்கு இடையூறாக அமைந்திருப்பதாலும் பள்ளிவாசலை விஸ்தரிக்க வேண்டிய தேவை இருப்பதாலும் குறித்த பள்ளிவாசல் வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.அப்புதிய கட்டிடமே நேற்று திறந்துவைக்கப்பட்டது.
எனினும் நேற்று மாலை குறித்த பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி தலைமையிலான குழுவினர் அப்பள்ளிவாசலை மூடுமாறுகோரி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆகையால் பள்ளிவாசல் மூடப்பட்டதோடு குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலையும் நிலவியது. உடனடியாக பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு பள்ளிவாசலுக்கு பாதுகாப்பும் வழங்கினர்.அத்துடன் இன்று ஜும்ஆத் தொழுகை நேரம் குறித்த பிரதேசத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதுசம்பந்தமாக பள்ளிவாசல் நிர்வாக சபையினரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘தீனுல் இஸ்லாம் பள்ளிவாசல்’ 40 வருட காலமாக இயங்கி வருகிறது.குறித்த பிரதேசத்தில் 20 முஸ்லிம் குடும்பங்கள் இருக்கும்போது ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசல் இது. எனினும் தற்போது 430 முஸ்லிம் குடும்பங்கள் இப்பிரதேசத்தில் வசிக்கின்றனர்.ஆகையால் பள்ளிவாசலில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.அத்துடன் முக்கியமாக பள்ளிவாசலுடன் ஒட்டியதாக நிற்கும் அரச மரம் கட்டிடத்திற்கு இடையூறாகவுள்ளது. இதற்கிணங்க நாம் புத்தசாசன அமைச்சின் அனுமதியைப் பெற்று வேறொரு இடத்திற்கு பள்ளிவாசலை இடமாற்றம் செய்தோம் எனக்குறிப்பட்டார்.
(படங்க   ள் : எஸ்.எம்.சுரேந்திரன்) 
. |
0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment