தான் இழந்துள்ள செல்வாக்கை மூடிமறைக்க பொது பல சேனா போன் ற அமைப்புகளை அரசாங்கம் இயக்குகின்றது. அதன் விளைவானது நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தையே ஏற்படுத்தும். பொது பல சேனாவின் கருத்துக்களானது அரசில் அங்கம் வகிக்கும் சில இனவாத கட்சிகளின் கொள்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது.
இப்போக்கை அரசு கண்டுகொள்ளாமல் கலவரமொன்றினை ஏற்படுத்தும் செயற்பாட்டுகளையே முன்னெடுத்துள்ளது. இதனை உடன் நிறுத்தாது அசமந்தமாக செயற்படுமிடத்து பாரிய பிரச்சினைகளுக்கு எல்லா சமூகங்களும் முகம்கொடுக்க நேரிடும் என மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பொது பல சேனா அமைப்பு நேற்று முன்தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை எதிர்த்து விடிவெள்ளியிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்நாடானது சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமானது ஏனையவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாதவிடத்து இங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார். எனினும் இலங்கை அரசியல் யாப்பில் எங்கும் இலங்கை ஒரு பெளத்த நாடு என அடையாளப்படுத்தப்படவில்லை. மாறாக பெளத்த சமயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே கூறப்பட்டிருக்கிறது.
பொது பல சேனாவின் குறித்த இனவாத கூற்றுக்களுக்கு அரசு உடன் பதிலளிக்க வேண்டும். இவர்களின் இனவாத செயற்பாடுகளால் சிறுபான்மையினரின் மனம் புண்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் அச்சத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி இனவாதத்தை தூண்டியதாக கூறி குற்றப்புலனாய்வுப்பிரிவினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் பகிரங்கமாக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் பொது பல சேனாவிற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் இதுவரையில் இல்லை.
இவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் அரச மட்டத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பின் இன்று பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். எனினும் அவர்களுக்கு எதிராக அரசினால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் எதிர்காலத்தில் முஸ்லிகளுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கலாம். எனவே, அரசானது இவ்வாறான இனவாத செயற்பாடுகளை தூண்டுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் அவ்வாறானவர்களின் இனவாத செயற்பாடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
பொது பல சேனாவின் கருத்தில் அரசில் அங்கம் வகிக்கும் சில இனவாத கட்சிகளுக்கும் பங்கு உள்ளது. குறித்த கட்சிகளின் கொள்கையினை வெளிக்காட்டுவதாகவே பொது பல சேனாவின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
நாட்டில் எழுந்துள்ள பல்வேறு நெருக்கடிகளை சமாளிப்பதற்காக அரசானது பொது பல சேனாவை பயன்படுத்துகிறது. இந்நிலைமை தொடருமானால் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை சந்திக்க வேண்டி ஏற்படும். ஏனெனில் அவ்வாறான இனவாத நடவடிக்கைகள் இன மோதல் ஒன்றையே ஏற்படுத்தும். இவ்வினவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாத பட்சத்தில் நாட்டில் வாழும் எல்லா சமூகங்களும் பாரிய பிரச்சினை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என தெரிவித்தார்







0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment